செவ்வாய், 13 நவம்பர், 2012

தீபாவளிப் பண்டிகை - வேர்ச்சொல் ஆய்வு

வடமொழியில் தீப்/தீபம் என்பதற்கு ஒளி/விளக்கு என்றொரு பொருள் உண்டு. ஆலி/ஆவலி என்னும் சொல்லுக்கு வரிசை/நிரல் என்பது பொருள். விளக்குகளை வரிசையாக அமைத்துக் கொண்டாடும் பண்டிகை என்னும் பொருள்படுகிறது தீபாவளி என்னும் சொல்.  ஆனால், தமிழ்நாட்டில் பெரும்பாலும் கார்த்திகைப் பண்டிகையைத் தான் இவ்வாறு மக்கள் கொண்டாடுகிறார்கள்.

பண்டிகை என்னும் சொல் தூய தமிழ்ச்சொல். இதன் பொருள் நுட்பமானது. பண்டு என்றால் பழைமை என்று பொருள்படும். 'இகு' (இகுத்தல்) என்னும் வினைச்சொல்லின் ஒரு பொருள் 'அழை' (அழைத்தல்) என்பது. மிகு-மிகை, நகு-நகை, பகு-பகை, வகு-வகை, தகு-தகை என்பனவற்றோடு ஒப்பிட்டால், 'இகு' என்பதன் பெயர்ச்சொல் வடிவம் 'இகை' என்றாக வேண்டும். பண்டு+இகை என்னும் இணைவில் பண்டு என்னும் சொல்லின் ஈற்றில் உள்ள குற்றியலுகரம் கெட்டு, இகையில் உள்ள 'இ'யோடு புணர்ந்து பண்டிகை என்னும் சொல் பெறப்படுகிறது. 'பழைமையின் அழைப்பு' என்னும் பொருளில் பண்டிகை கையாளப்படுகிறது.

[பண்டு என்பதில் உள்ள முதல் உயிர் நீண்டு பாண்டு என்றாகிறது. இதில் இருந்து பிறப்பது தான் பாண்டி என்னும் சொல். பாண்டி நாடு என்றால் பழமையான நாடு என்று பொருள். ஆனால், கால்டுவெல் போன்ற கிறிஸ்த்தவ மிஷனரிமார்கள் இதனை மகாபாரதத்தில் இடம்பெற்ற ஒரு மன்னன் பெயராகிய பாண்டு/பாண்டவர் என்பதில் இருந்து பிழைபடத் தருவித்தார்கள். தமிழில் உள்ள தொன்மை/பழமை என்னும் பொருள்பட அமைந்த பாண்டு/பாண்டி என்பதுதான் மிகப்பொருத்தமான வேர்ச்சொல். சிலப்பதிகாரம் என்னும் சொல்லில் சிலம்பானது சிலப்பு என்றானது போல், பாண்டன்/பாண்டி என்பன பாட்டன்/பாட்டி என்றாகி இன்னும் வழக்கில் இருந்துவரும் சொற்கள். இவை பழமை, முதுமையை உணர்த்தும் சொற்கள். பழமையான நாட்டின் தலைவன் பாண்டியன் என்றழைக்கப்பட்டுள்ளான்.]

3 கருத்துகள்:

alapaheerathan சொன்னது…

சரியான விளக்கம் தந்தீர்கள் நன்றி

ராவணன் சொன்னது…

தீப்/தீபம் வரை சென்ற நீங்கள் தீ என்ன மொழியென்று கூறவில்லையே?

தீ இல்லாமல் தீபம் வந்துவிடுமா?

தீபாவளி...சூறாவளி...இதில் இருக்கும் வளிக்கு என்ன பொருள்?

சிலருக்கு வலிக்கலாம்.....தீவளி ..தீவவளி..தீபவளி...தீவாளி...தீபவளி....தீபாவளி தமிழர் பண்டிகையே.

முத்துநாடான் சொன்னது…

@ பகீரதன் அழகரத்தினம்

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

@ ராவணன்

தீ என்பது தீந்தமிழ்ச்சொல்தான். ஐயம் எதுவுமில்லை. இரவு/இரா என்பது வடக்கே சென்று ரா/ராத்/ராத்ரி என்றாகி ராத்திரி என்று மீண்டும் தமிழுக்கு வந்திருப்பது போல, தீ என்பதும் தமிழில் இருந்து வடக்கே சென்று தீபத்தைப் பிறப்பித்து மீண்டும் தமிழுக்கு தீபமாக வந்திருக்கலாம். பழந்தமிழ் இலக்கியங்களில் தீபம் என்னும் சொல்லைக் கண்டிராததால் இப்படித் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் வேலையைத்தான் செய்யவேண்டியிருக்கிறது.

வளிக்கும் பொருள் கூறி, அதோடு பொருந்தும் தீபாவளிக்கான பொருளை நீங்களே கூறுங்களேன். தீபாவளி தமிழர் பண்டிகை என்று அடித்துக்கூறுகிறீர்கள். பழந்தமிழ் இலக்கியங்களில் தீபாவளிக் கொண்டாட்டம் பற்றிய குறிப்பு ஏதேனும் இருக்கிறதா? உங்களுக்குத் தெரிந்தால் எனக்கும் சொல்லுங்களேன்.