வியாழன், 14 பிப்ரவரி, 2008

ஒரு காதலியின் ஏக்கம்

தனிமை கொடியது, அதிலும் மாலைப் பொழுதோ மிக மிகத் துன்பம் நிறைந்தது. மாலைப் பொழுதில் ஒரு காதலி  தனது காதலனுக்காகக் காத்திருந்து ஏங்கும் ஏக்கத்தை, தனது சிலப்பதிகாரக் கானல்வரிப் பாடல் ஒன்றில், அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறார் இளங்கோவடிகள் .

துன்பம்(புன்கண்) மிகுந்த(கூர்ந்த) மாலைப் பொழுதில், கண்கள் பனிக்க(புலம்ப) காத்திருக்கும் காதலி, கடற்கரைச் சோலையில், அதாவது, கானலில் உள்ள நெய்தல்(நெய்தால்-விளிவேற்றுமை) மலரைக் காண்கிறாள். அது அவளது கண்கள் போல துன்பத்தில் உழலவில்லை. இனிய தேன்(கள்) சொரியும் அம்மலரின் வாயானது அந்த மாலை நேரத்தில் கூம்பியிருக்க, அம்மலர் கவலையற்று துயில்வது போல் தோன்றுகிறது. தனது நனவில் தான் காதலர் அச்சோலைக்கு வரவில்லை, உறங்கும் அம்மலர் கொள்ளும்(எய்தும்) கனவிலாவது இரக்கமற்ற-காதலர்(வன்கணார்) அந்தக் கானலுக்கு வருகிறாரோ, அவர் வருகையை அம்மலர் கண்டறிகிறதோ என்னும் ஏக்கத்தோடு அம்மலரை வினவுகிறாள் அக்காதலி.

புன்கண்கூர் மாலைப் புலம்பும்என் கண்ணேபோல்
துன்பம் உழவாய் துயிலப் பெறுதியால்,
இன்கள்வாய் நெய்தால், நீ எய்தும் கனவினுள்
வன்கணார் கானல் வரக்கண் டறிதியோ?

On [this] grievous evening, unlike my bewailing eyes,
As you sleep [peacefully] without lamenting in distress,
O sweet honey bearing Neythal flower, [at least] in your dream
Do you see [my] hard-hearted lover coming to [this] sea-side grove?

---- Ilango Adigal in Silappathikaaram, a 2nd century AD Tamil Classic
இந்தப் பாவினைப் பாடலாகப் பாட விரும்பினால் "மார்கழிப் பூவே! மார்கழிப் பூவே!" என்னும் பாடல் மெட்டைப் பயன்படுத்தலாம், அல்லது இன்னும் பொருத்தமாக கந்த சஷ்டி கவசத்தின் மெட்டையும் பயன்படுத்தலாம் :P

கருத்துகள் இல்லை: