வெள்ளி, 25 செப்டம்பர், 2015

திருவாதவூரார் அருளிய திருஞானத்தாழிசை பாடலுக்கான மெட்டு


திருஞானத்தாழிசை என்னும் பதிகம் திருவாதவூர்ப் பெருமான் மாணிக்க வாசகர் எழுதியதாகக் கூறப்படுகிறது. இது திருமுறைத் தொகுப்பு எதிலும் இல்லாத ஒரு பதிகம். இப்பதிகத்தை இவர் எழுதவில்லை என்னும் கருத்துக்களும் கூட உண்டு.

இப்பதிகத்தில் மொத்தம் 12 பாடல்கள் உள்ளன:

பாடல்-1

சுழியாகிய முனைகண்டபின் உற்றார்உற வற்றாய்
        சூதும்பல பொய்பேசிய தொழிலும்பிறக் கிட்டாய்
வழியாகிய துறைகண்டபின் அனுட்டானமும் அற்றாய்
        வழங்கும்பல நூல்கற்றிடு நினைவும்பிறக் கிட்டாய்
விழியாகிய மலர்கண்டபின் உயர்அர்ச்சனை யற்றாய்
        மெய்ந்நீறிடு திருமந்திரம் விட்டாய்சிவம் உற்றாய்
அழியாப்பதி குடியேறினை அச்சம்பல வற்றாய்
        யாரொப்பவர் நிலையுற்றவர் அலைவற்றிரு மனமே

பாடல்-2‏

நெஞ்சிற்பொருள் அடிகண்டபின் நெஞ்சிற்பகை யற்றாய்
         நேசத்தொடு பார்மங்கையர் மேலும்நினை வற்றாய்
மிஞ்சிச்சொலும் உரையாண்மையும் வீம்பும்இடும் பற்றாய்
         விரதங்களும் வேதங்களும் வீணாகம றந்தாய்
அஞ்சும்உட லாய்க்கண்டபின் ஆசைத்தொடர் பற்றாய்
         ஆருந்திருக் கோயில்சிவம் அதுவும்தனில் உற்றாய்
தஞ்சம்எனும் ஞானக்கடல் மூழ்குந்திற மாகித்
          தாள்சேர்ந்தனை குறைவேதினி சலியாதிரு மனமே

பாடல்-3‏

நாசிநுனி நடுவேதிருக் கூத்தாகிய நடனம்
          ஞானக்கண் ணால்அதனை நாடிச்செயல் கண்டு
சீசீஎனும் உரையற்றனை சினமற்றனை உயிர்கள்
          செய்யும்அந் நினைவற்றனை நேசத்துடன் கூடிக்
கூசிக்குல வரவற்றனை கோளற்றனைப் பாவக்
          குடியற்றனை நலமுற்றனை குடியேறினை மேலாம்
காசிப்புனல் தனில்மூழ்கினை கரையேறினை காட்சி
          கண்டாய்அரன் கொலுவாகிய சபைமேவினை மனமே

பாடல்-4‏

வெளிபெற்றிடு சொருபப்பொருள் வெளியாகிய ஒளியில்
          விளையாகிய நாதத்தொனி விந்தின்செயல் கண்டு
களிபெற்றனை தயவுற்றனை பிறவிக்கடல் என்னும்
          களையற்றனை உலகத்தினில் வரவற்றனை காணா
ஒளிபெற்றனை மயலற்றனை ஒழிவற்றனை ஓதும்
          உரையற்றனை களிபெற்றனை பசியற்றனை ஊறல்
குளிபெற்றனை அரனுற்றிடு கொலுவுற்றனை கோமான்
          கொடைபெற்றனை அறிவுற்றனை கோளற்றனை மனமே

பாடல்-5

பத்தோடிரு கலையாகிய பனிரெண்டினில் நாலும்
          பாழ்போகிட மீண்டேவரும் பதியின்கலை நாலும்
பெற்றோடிவந் திங்கேறிய பேர்மைந்தனைக் கண்டு
          பேசும்நிலை யோடும்உற வாகிப்பிணக் கற்றாய்
கற்றோருடன் கற்றோமெனும் வித்தாரமும் அற்றாய்
          கானற்புன லோகப்பிடி மானத்தையும் அற்றாய்
சித்தோடிரு சித்தாகிய சிற்றம்பலம் மீதே
          சேர்ந்தாய்குறை தீர்ந்தாய்இனி வாழ்வாயிரு மனமே

பாடல்-6

அல்லற்படும் ஓரொன்பது வாசல்பெரு வாசல்
          ஆரும்அறி வார்கள்அறி யார்கள்ஒரு வாசல்
சொல்லப்படு தில்லைச்சிறு வாசற்படி மீதே
          சூழும்பல கரணாதிகள் வாழும்மணி வாசல்
தில்லைப்பதி யருகேயடை யாளமெனல் ஆகும்
          சேருங்கனி காணும்பசி தீரும்பறந் தோடும்
சொல்லப்படும் மல்லற்பல நூல்கற்றத னாலே
          சின்னஞ்சிறு வாசல்புக லாமோசொலு மனமே

பாடல்-7

விண்டும்ஒரு வர்க்கும்உரை யாடப்பொருள் தானும்
          பீஜாட்சர வீதித்தெருக் கோடிமுடிந் திடத்தே
கண்டும்இருந் தார்க்குள்ளிரு பரிபன்னிரு காலாற்
          காணும்அது தானும்பனி ரண்டங்குலம் பாயும்
பிண்டம்புகும் அண்டம்புகும் எங்கும்விளை யாடிப்
          பீடம்எனும் நிலைசேர்ந்திடு பெருமைதனைக் காண்பாய்
என்றும்மொழி யற்றார்பரத் தோடும்உற வாகி
          ஏதும்உரை யாமல்இருப் பார்கள்அறி மனமே

பாடல்- 8

முப்பாழ்கடந் தப்பாலொரு முகப்புண்டதின் நடுவே
          முச்சந்திகள் கூடும்அது தானும்முதற் பாழாம்
அப்பாழ்கடந் தப்பாலொரு கணவாயதன் பெருமை
          அறுகுநுனி யிடமும்என அறிவார்பெரி யோர்கள்
செப்பாதது தானும்அறிந் தப்பாற்கடந் திட்டால்
          சேருங்கலை நாலும்வரு திசையுமறிந் திட்டால்
ஒப்பார்இனி இப்பாரினில் ஒப்பாருமே யில்லை
          ஒன்றைப்பிடி தன்மைப்படு மெண்ணப்படு மனமே

பாடல்-9

நாதம்எழுந் தெழுந்தோடிவந் துறையும்திருக் கூத்து
          ஞானக்கண்ணி னாலும்அதை நாடிச்செயல் கண்டு
பூதம்எனும் பயமற்றனை பொறியற்றனை மெய்யிற்
          பூசும்பரி மளமற்றனை பூவற்றனை லோகஞ்
சூதம்என வரவற்றனை சுசியற்றனை எச்சில்
          சுத்தஞ்செயு நினைவற்றனை சுவையற்றனை ஞானப்
பாதம்முடி மேல்வைத்தனை பற்றற்றனை யுற்று
          பதிபெற்றனை இகலற்றனை பதையாதிரு மனமே

பாடல்-10

ஆயும்பல நூல்சாத்திர வேதத்தொடு புராணம்
          ஆய்வந்திடு வழிகண்டறி யார்கள்அது தானும்
பாயுங்கலை பனிரண்டினில் உண்டாகிய பருவம்
          பாரும்அறி யாதுபனி ரண்டின்செயல் கண்டு
நாயின்கடை கெட்டாய்வழி பாடும்முதற் பெற்றாய்
          நாள்கோள்பல வற்றாய்கொலை களவென்றதும் அற்றாய்
வாயும்வல தற்றாய்உயிர் வீடும்நெறி யற்றாய்
          மண்ணின்வர வற்றாய்இனி பொன்னம்பல மனனே

பாடல்-11

கலையாகிய பிறவிக்கடல் அலையாமலு ழன்றேன்
          கற்கும்பல சமயங்களும் தர்க்கங்களும் விட்டேன்
நிலையாதெனப் பொருள்செல்வமும் நினைவும்பிறக் கிட்டேன்
          நித்தம்செயும் நியமங்களும் நேமங்களும் அற்றேன்
தொலையாதவு றக்கத்தொடு சுகதுக்கமும் அற்றேன்
          துணையாகிய ஞானக்கடல் மூழ்குந்துறை கண்டேன்
அலையாமலி ருக்கும்மனம் அதிலேகுடி கொண்டேன்
          ஆனந்தம் வெளிப்பட்டபின் நானென்றறி யேனே.

பாடல்-12

உருவானது விந்தின்பெயர் குருவானது ஞானம்
           உடலுக்குயிர் ஈராறதில் ஒருநான்கனுள் முதலும்
குருவானது முனைமீதினில் அணுவாகிய வெளியில்
            குடியாகிய பதிகண்டவர் அருள்வாதவூ ராரே
ஒருவாசக திருவாசகம் புவிமீதினில் மகிழ்ந்தே
           உரைசெய்தனர் தமிழ்த்தாழிசை நெறியின்படி நின்றோர்
கருவாசலில் அணுகாமலே பிறவாநெறி பெறுவார்
           கடவுட்செயல் அறியாதவர் கருவாசலிற் புகுவார்.



இப்பாடல்களை "பாலும் பழமும்" திரைப்படத்தில் எம்.எஸ்.வி. இசையில் இடம்பெற்ற "நான்பேச நினைப்பதெல்லாம் நீபேச வேண்டும்" என்னும் பாடல் மெட்டில் பாடலாம்.

நான்பேச | நினைப்பதெல்லாம்| நீபேச| வேண்டும்
சுழியாகிய | முனைகண்டபின் | உற்றாருற | வற்றாய்


நாளோடும் | பொழுதோடும்| உறவாட| வேண்டும் |
................ உறவாட | வேண்டும்|
சூதும்பல| பொய்பேசிய| தொழிலும்பிறக்|  கிட்டாய்|
................ தொழிலும்பிறக்| கிட்டாய்|



இதே மெட்டில், தேவாரத்தில் உள்ள சில திருப்பதிகங்களையும் பாடலாம், அத்தகைய திருப்பதிகங்களுக்கான பண் நட்டபாடை என்று குறிப்பிடப்படுகிறது. (ஆனால், நட்டபாடையில் உள்ள எல்லாப் பதிகங்களையும் இந்த மெட்டில் பாடிவிட முடியாது :) )

எடுத்துக்காட்டாக, முதல் திருமுறையில் 9 முதல் 18 வரை உள்ள திருப்பதிகங்களை இந்த மெட்டில் பாடலாம்.

9.  திருவேணுபுரம்

வண்டார்குழல் அரிவையொடும் பிரியாவகை பாகம்
பெண்டான்மிக ஆனான்பிறைச் சென்னிப்பெரு மானூர்
தண்டாமரை மலராளுறை தவளந்நெடு மாடம்
விண்டாங்குவ போலும்மிகு வேணுபுர மதுவே   (1.9.1)

10. திரு அண்ணாமலை

உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே  (1.10.1)

11. திருவீழிமிழலை

சடையார்புனல் உடையானொரு சரிகோவண முடையான்
படையார்மழு வுடையான்பல பூதப்படை யுடையான்
மடமான்விழி உமைமாதிடம் உடையானெனை யுடையான்
விடையார்கொடி யுடையானிடம் வீழிம்மிழ லையே.  (1.11.1)

12. திருமுதுகுன்றம்

மத்தாவரை நிறுவிக்கடல் கடைந்தவ்விடம் உண்ட
தொத்தார்தரு மணிநீண்முடிச் சுடர்வண்ணன திடமாம்
கொத்தார்மலர் குளிர்சந்தகில் ஒளிர்குங்குமங் கொண்டு
முத்தாறுவந் தடிவீழ்தரு முதுகுன்றடை வோமே.   (1.12.1)

மேலுள்ள பதிகங்கள் இத்தகைய தாழிசை இனத்தைச் சேர்ந்தவை எனக் கொள்ளலாம். ஆனால் இது இலக்கண நூலில் கலிவிருத்தம் என்று அழைக்கப்படுகிறது. திருவாசகத்தின் உயிருண்ணிப் பத்து என்னும் பதிகமும் இவ்வகையைச் சேர்ந்தது.

பைந்நாப்பட அரவேரல்குல் உமைபாகம தாய்என்
மெய்ந்நாள்தொறும் பிரியாவினைக் கேடாவிடைப் பாகா
செந்நாவலர் பரசும்புகழ்த் திருப்பெருந்துறை உறைவாய்
எந்நாட்களித் தெந்நாள்இறு மாக்கேன்இனி யானே

ஆக, சீர்களின் எண்ணிக்கைதான் மாறுபடுகிறதே ஒழிய, இத்தகைய விருத்தம் மாணிக்கவாசகர் திருவாசகத்திலேயே கையாண்ட ஒன்றுதான் என்பது தெளிவு.

நட்டபாடையில்  தாழிசை இனத்தைச் சாராத பதிகங்கள் தேவாரத்தில் பல உள்ளன.

எடுத்துக்காட்டாக,

1.19 - திருக்கழுமலம் - திருவிராகம் (பண்: நட்டபாடை)

பிறையணி படர்சடை முடியிடைப்
     பெருகிய புனலுடை யவனிறை
இறையணி வளையிணை முலையவள்
     இணைவன தெழிலுடை யிடவகை
கறையணி பொழில்நிறை வயலணி
     கழுமலம் அமர்கனல் உருவினன்
நறையணி மலர்நறு விரைபுல்கு
     நலம்மலி கழல்தொழன் மருவுமே. (1.19.1)

1 கருத்து:

Aruno dorean சொன்னது…

நல்ல மனதோடு வெளியிட்ட உங்களுக்கு இந்த நூல் ஆசானும் நித்திய ஜீவனுமான மாணிக்கவாசகர் அய்யாவுடைய ஆசிர்வாதமும் என்னோட ஆசிர்வாதமும் உண்டு. நல்ல ஐடியா எல்லாம் ராகத்திற்கு செய்துள்ளீர். தாங்கள் எங்கு உள்ளீர்? நேரில் சந்திக்கலாமே!சிந்திப்போம்