சனி, 10 அக்டோபர், 2015

இறைவனை விட சாமர்த்தியம் நிறைந்த மாணிக்க வாசகர்!

தலைப்பைப் பார்த்துவிட்டு "அதெப்படி? அனைத்தும் அறிந்த இறைவனை விட மாணிக்க வாசகர் எப்படி சாமர்த்தியமாக இருந்திருக்க முடியும்?" என்று எண்ணுகிறீர்களா? இது மாணிக்கவாசகரே தன்னைப் பற்றி பெருமையாகக் குறிப்பிட்டுள்ள கருத்து. அதனை விளக்கமாகப் படித்ததும், நீங்களும் இக்கருத்தோடு உடன்படுவீர்கள். 

திருவாசகத்தில் "கோயில் திருப்பதிகம்" என்னும் பாடலில் இறுதியாக உள்ள பாவில் இவ்வாறு வருகிறது:

தந்தது உன் தன்னை, கொண்டது என் தன்னை 
        சங்கரா ஆர்கொலோ சதுரர்? 
அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றேன் 
        யாது நீ பெற்றது ஒன்று என்பால்?
சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்! 
        திருப்பெரும் துறைஉறை சிவனே! 
எந்தையே ஈசா, உடலிடம் கொண்டாய் 
        யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே!

மாணிக்க வாசகர் பல இடங்களில் தன்னை நாயினும் இழிந்தவன் என்று அடக்கமாகக் குறிப்பிடுகிறார். அத்தகைய அவரை எடுத்துக்கொண்டு, அவருக்கு ஈடாக இறைவன் தன்னையே அவருக்குக் கொடுத்துள்ளார். இந்தச் சரிசமம் இல்லாத பரிமாற்றத்தில் யாருக்குப் பெரும்பேறு கிட்டியது? அறிவாளி யார்? இறைவன் தன்னையே கொடுத்ததால் மாணிக்கவாசகருக்கு எல்லையில்லா ஆனந்தம் கிட்டியது. ஆனால், அவரைப் பெற்றுக்கொண்ட இறைவனுக்கு என்ன கிடைத்தது? யாருக்கு நிறைய சாமர்த்தியம்? 

ஒருவர் தன் உடலினுள்ளேயே இறையைத் தேடி வீடுபேறு அடையலாம் என்பது சித்தர்களின் யோகநெறிக் கருத்து. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்மறையில், திருவள்ளுவர் திருக்குறளில் விரித்தெழுதாமல் விட்டுவிட்ட நான்காம் மறையான வீடு பற்றி, திருவள்ளுவர் கையாண்ட அதே குறள் வெண்பாவினால், நான்மறைப் பொருளை நிறைவு செய்ய, அவ்வையாரால் எழுதப்பட்டதாகக் கூறப்படும் ஞானக்குறள், இத்தகைய யோகநெறியை,

மாசற்ற கொள்கை மனதில் அடைந்தக்கால்
ஈசனைக் காட்டும் உடம்பு

என்று சுருக்கமாகக் கூறுகிறது.

பக்தி நெறியைப் பரப்பிய மாணிக்கவாசகருக்கும் இந்த யோகநெறிக் கருத்து ஏற்புடையதே என்பதை அவரது "உடலிடம் கொண்டாய்" என்னும் சொற்றொடரில் இருந்து உணர்ந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை: