ஆன்மிகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆன்மிகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 10 அக்டோபர், 2015

இறைவனை விட சாமர்த்தியம் நிறைந்த மாணிக்க வாசகர்!

தலைப்பைப் பார்த்துவிட்டு "அதெப்படி? அனைத்தும் அறிந்த இறைவனை விட மாணிக்க வாசகர் எப்படி சாமர்த்தியமாக இருந்திருக்க முடியும்?" என்று எண்ணுகிறீர்களா? இது மாணிக்கவாசகரே தன்னைப் பற்றி பெருமையாகக் குறிப்பிட்டுள்ள கருத்து. அதனை விளக்கமாகப் படித்ததும், நீங்களும் இக்கருத்தோடு உடன்படுவீர்கள். 

திருவாசகத்தில் "கோயில் திருப்பதிகம்" என்னும் பாடலில் இறுதியாக உள்ள பாவில் இவ்வாறு வருகிறது:

தந்தது உன் தன்னை, கொண்டது என் தன்னை 
        சங்கரா ஆர்கொலோ சதுரர்? 
அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றேன் 
        யாது நீ பெற்றது ஒன்று என்பால்?
சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்! 
        திருப்பெரும் துறைஉறை சிவனே! 
எந்தையே ஈசா, உடலிடம் கொண்டாய் 
        யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே!

மாணிக்க வாசகர் பல இடங்களில் தன்னை நாயினும் இழிந்தவன் என்று அடக்கமாகக் குறிப்பிடுகிறார். அத்தகைய அவரை எடுத்துக்கொண்டு, அவருக்கு ஈடாக இறைவன் தன்னையே அவருக்குக் கொடுத்துள்ளார். இந்தச் சரிசமம் இல்லாத பரிமாற்றத்தில் யாருக்குப் பெரும்பேறு கிட்டியது? அறிவாளி யார்? இறைவன் தன்னையே கொடுத்ததால் மாணிக்கவாசகருக்கு எல்லையில்லா ஆனந்தம் கிட்டியது. ஆனால், அவரைப் பெற்றுக்கொண்ட இறைவனுக்கு என்ன கிடைத்தது? யாருக்கு நிறைய சாமர்த்தியம்? 

ஒருவர் தன் உடலினுள்ளேயே இறையைத் தேடி வீடுபேறு அடையலாம் என்பது சித்தர்களின் யோகநெறிக் கருத்து. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்மறையில், திருவள்ளுவர் திருக்குறளில் விரித்தெழுதாமல் விட்டுவிட்ட நான்காம் மறையான வீடு பற்றி, திருவள்ளுவர் கையாண்ட அதே குறள் வெண்பாவினால், நான்மறைப் பொருளை நிறைவு செய்ய, அவ்வையாரால் எழுதப்பட்டதாகக் கூறப்படும் ஞானக்குறள், இத்தகைய யோகநெறியை,

மாசற்ற கொள்கை மனதில் அடைந்தக்கால்
ஈசனைக் காட்டும் உடம்பு

என்று சுருக்கமாகக் கூறுகிறது.

பக்தி நெறியைப் பரப்பிய மாணிக்கவாசகருக்கும் இந்த யோகநெறிக் கருத்து ஏற்புடையதே என்பதை அவரது "உடலிடம் கொண்டாய்" என்னும் சொற்றொடரில் இருந்து உணர்ந்து கொள்ளலாம்.

வெள்ளி, 25 செப்டம்பர், 2015

திருவாதவூரார் அருளிய திருஞானத்தாழிசை பாடலுக்கான மெட்டு


திருஞானத்தாழிசை என்னும் பதிகம் திருவாதவூர்ப் பெருமான் மாணிக்க வாசகர் எழுதியதாகக் கூறப்படுகிறது. இது திருமுறைத் தொகுப்பு எதிலும் இல்லாத ஒரு பதிகம். இப்பதிகத்தை இவர் எழுதவில்லை என்னும் கருத்துக்களும் கூட உண்டு.

இப்பதிகத்தில் மொத்தம் 12 பாடல்கள் உள்ளன:

பாடல்-1

சுழியாகிய முனைகண்டபின் உற்றார்உற வற்றாய்
        சூதும்பல பொய்பேசிய தொழிலும்பிறக் கிட்டாய்
வழியாகிய துறைகண்டபின் அனுட்டானமும் அற்றாய்
        வழங்கும்பல நூல்கற்றிடு நினைவும்பிறக் கிட்டாய்
விழியாகிய மலர்கண்டபின் உயர்அர்ச்சனை யற்றாய்
        மெய்ந்நீறிடு திருமந்திரம் விட்டாய்சிவம் உற்றாய்
அழியாப்பதி குடியேறினை அச்சம்பல வற்றாய்
        யாரொப்பவர் நிலையுற்றவர் அலைவற்றிரு மனமே

பாடல்-2‏

நெஞ்சிற்பொருள் அடிகண்டபின் நெஞ்சிற்பகை யற்றாய்
         நேசத்தொடு பார்மங்கையர் மேலும்நினை வற்றாய்
மிஞ்சிச்சொலும் உரையாண்மையும் வீம்பும்இடும் பற்றாய்
         விரதங்களும் வேதங்களும் வீணாகம றந்தாய்
அஞ்சும்உட லாய்க்கண்டபின் ஆசைத்தொடர் பற்றாய்
         ஆருந்திருக் கோயில்சிவம் அதுவும்தனில் உற்றாய்
தஞ்சம்எனும் ஞானக்கடல் மூழ்குந்திற மாகித்
          தாள்சேர்ந்தனை குறைவேதினி சலியாதிரு மனமே

பாடல்-3‏

நாசிநுனி நடுவேதிருக் கூத்தாகிய நடனம்
          ஞானக்கண் ணால்அதனை நாடிச்செயல் கண்டு
சீசீஎனும் உரையற்றனை சினமற்றனை உயிர்கள்
          செய்யும்அந் நினைவற்றனை நேசத்துடன் கூடிக்
கூசிக்குல வரவற்றனை கோளற்றனைப் பாவக்
          குடியற்றனை நலமுற்றனை குடியேறினை மேலாம்
காசிப்புனல் தனில்மூழ்கினை கரையேறினை காட்சி
          கண்டாய்அரன் கொலுவாகிய சபைமேவினை மனமே

பாடல்-4‏

வெளிபெற்றிடு சொருபப்பொருள் வெளியாகிய ஒளியில்
          விளையாகிய நாதத்தொனி விந்தின்செயல் கண்டு
களிபெற்றனை தயவுற்றனை பிறவிக்கடல் என்னும்
          களையற்றனை உலகத்தினில் வரவற்றனை காணா
ஒளிபெற்றனை மயலற்றனை ஒழிவற்றனை ஓதும்
          உரையற்றனை களிபெற்றனை பசியற்றனை ஊறல்
குளிபெற்றனை அரனுற்றிடு கொலுவுற்றனை கோமான்
          கொடைபெற்றனை அறிவுற்றனை கோளற்றனை மனமே

பாடல்-5

பத்தோடிரு கலையாகிய பனிரெண்டினில் நாலும்
          பாழ்போகிட மீண்டேவரும் பதியின்கலை நாலும்
பெற்றோடிவந் திங்கேறிய பேர்மைந்தனைக் கண்டு
          பேசும்நிலை யோடும்உற வாகிப்பிணக் கற்றாய்
கற்றோருடன் கற்றோமெனும் வித்தாரமும் அற்றாய்
          கானற்புன லோகப்பிடி மானத்தையும் அற்றாய்
சித்தோடிரு சித்தாகிய சிற்றம்பலம் மீதே
          சேர்ந்தாய்குறை தீர்ந்தாய்இனி வாழ்வாயிரு மனமே

பாடல்-6

அல்லற்படும் ஓரொன்பது வாசல்பெரு வாசல்
          ஆரும்அறி வார்கள்அறி யார்கள்ஒரு வாசல்
சொல்லப்படு தில்லைச்சிறு வாசற்படி மீதே
          சூழும்பல கரணாதிகள் வாழும்மணி வாசல்
தில்லைப்பதி யருகேயடை யாளமெனல் ஆகும்
          சேருங்கனி காணும்பசி தீரும்பறந் தோடும்
சொல்லப்படும் மல்லற்பல நூல்கற்றத னாலே
          சின்னஞ்சிறு வாசல்புக லாமோசொலு மனமே

பாடல்-7

விண்டும்ஒரு வர்க்கும்உரை யாடப்பொருள் தானும்
          பீஜாட்சர வீதித்தெருக் கோடிமுடிந் திடத்தே
கண்டும்இருந் தார்க்குள்ளிரு பரிபன்னிரு காலாற்
          காணும்அது தானும்பனி ரண்டங்குலம் பாயும்
பிண்டம்புகும் அண்டம்புகும் எங்கும்விளை யாடிப்
          பீடம்எனும் நிலைசேர்ந்திடு பெருமைதனைக் காண்பாய்
என்றும்மொழி யற்றார்பரத் தோடும்உற வாகி
          ஏதும்உரை யாமல்இருப் பார்கள்அறி மனமே

பாடல்- 8

முப்பாழ்கடந் தப்பாலொரு முகப்புண்டதின் நடுவே
          முச்சந்திகள் கூடும்அது தானும்முதற் பாழாம்
அப்பாழ்கடந் தப்பாலொரு கணவாயதன் பெருமை
          அறுகுநுனி யிடமும்என அறிவார்பெரி யோர்கள்
செப்பாதது தானும்அறிந் தப்பாற்கடந் திட்டால்
          சேருங்கலை நாலும்வரு திசையுமறிந் திட்டால்
ஒப்பார்இனி இப்பாரினில் ஒப்பாருமே யில்லை
          ஒன்றைப்பிடி தன்மைப்படு மெண்ணப்படு மனமே

பாடல்-9

நாதம்எழுந் தெழுந்தோடிவந் துறையும்திருக் கூத்து
          ஞானக்கண்ணி னாலும்அதை நாடிச்செயல் கண்டு
பூதம்எனும் பயமற்றனை பொறியற்றனை மெய்யிற்
          பூசும்பரி மளமற்றனை பூவற்றனை லோகஞ்
சூதம்என வரவற்றனை சுசியற்றனை எச்சில்
          சுத்தஞ்செயு நினைவற்றனை சுவையற்றனை ஞானப்
பாதம்முடி மேல்வைத்தனை பற்றற்றனை யுற்று
          பதிபெற்றனை இகலற்றனை பதையாதிரு மனமே

பாடல்-10

ஆயும்பல நூல்சாத்திர வேதத்தொடு புராணம்
          ஆய்வந்திடு வழிகண்டறி யார்கள்அது தானும்
பாயுங்கலை பனிரண்டினில் உண்டாகிய பருவம்
          பாரும்அறி யாதுபனி ரண்டின்செயல் கண்டு
நாயின்கடை கெட்டாய்வழி பாடும்முதற் பெற்றாய்
          நாள்கோள்பல வற்றாய்கொலை களவென்றதும் அற்றாய்
வாயும்வல தற்றாய்உயிர் வீடும்நெறி யற்றாய்
          மண்ணின்வர வற்றாய்இனி பொன்னம்பல மனனே

பாடல்-11

கலையாகிய பிறவிக்கடல் அலையாமலு ழன்றேன்
          கற்கும்பல சமயங்களும் தர்க்கங்களும் விட்டேன்
நிலையாதெனப் பொருள்செல்வமும் நினைவும்பிறக் கிட்டேன்
          நித்தம்செயும் நியமங்களும் நேமங்களும் அற்றேன்
தொலையாதவு றக்கத்தொடு சுகதுக்கமும் அற்றேன்
          துணையாகிய ஞானக்கடல் மூழ்குந்துறை கண்டேன்
அலையாமலி ருக்கும்மனம் அதிலேகுடி கொண்டேன்
          ஆனந்தம் வெளிப்பட்டபின் நானென்றறி யேனே.

பாடல்-12

உருவானது விந்தின்பெயர் குருவானது ஞானம்
           உடலுக்குயிர் ஈராறதில் ஒருநான்கனுள் முதலும்
குருவானது முனைமீதினில் அணுவாகிய வெளியில்
            குடியாகிய பதிகண்டவர் அருள்வாதவூ ராரே
ஒருவாசக திருவாசகம் புவிமீதினில் மகிழ்ந்தே
           உரைசெய்தனர் தமிழ்த்தாழிசை நெறியின்படி நின்றோர்
கருவாசலில் அணுகாமலே பிறவாநெறி பெறுவார்
           கடவுட்செயல் அறியாதவர் கருவாசலிற் புகுவார்.



இப்பாடல்களை "பாலும் பழமும்" திரைப்படத்தில் எம்.எஸ்.வி. இசையில் இடம்பெற்ற "நான்பேச நினைப்பதெல்லாம் நீபேச வேண்டும்" என்னும் பாடல் மெட்டில் பாடலாம்.

நான்பேச | நினைப்பதெல்லாம்| நீபேச| வேண்டும்
சுழியாகிய | முனைகண்டபின் | உற்றாருற | வற்றாய்


நாளோடும் | பொழுதோடும்| உறவாட| வேண்டும் |
................ உறவாட | வேண்டும்|
சூதும்பல| பொய்பேசிய| தொழிலும்பிறக்|  கிட்டாய்|
................ தொழிலும்பிறக்| கிட்டாய்|



இதே மெட்டில், தேவாரத்தில் உள்ள சில திருப்பதிகங்களையும் பாடலாம், அத்தகைய திருப்பதிகங்களுக்கான பண் நட்டபாடை என்று குறிப்பிடப்படுகிறது. (ஆனால், நட்டபாடையில் உள்ள எல்லாப் பதிகங்களையும் இந்த மெட்டில் பாடிவிட முடியாது :) )

எடுத்துக்காட்டாக, முதல் திருமுறையில் 9 முதல் 18 வரை உள்ள திருப்பதிகங்களை இந்த மெட்டில் பாடலாம்.

9.  திருவேணுபுரம்

வண்டார்குழல் அரிவையொடும் பிரியாவகை பாகம்
பெண்டான்மிக ஆனான்பிறைச் சென்னிப்பெரு மானூர்
தண்டாமரை மலராளுறை தவளந்நெடு மாடம்
விண்டாங்குவ போலும்மிகு வேணுபுர மதுவே   (1.9.1)

10. திரு அண்ணாமலை

உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே  (1.10.1)

11. திருவீழிமிழலை

சடையார்புனல் உடையானொரு சரிகோவண முடையான்
படையார்மழு வுடையான்பல பூதப்படை யுடையான்
மடமான்விழி உமைமாதிடம் உடையானெனை யுடையான்
விடையார்கொடி யுடையானிடம் வீழிம்மிழ லையே.  (1.11.1)

12. திருமுதுகுன்றம்

மத்தாவரை நிறுவிக்கடல் கடைந்தவ்விடம் உண்ட
தொத்தார்தரு மணிநீண்முடிச் சுடர்வண்ணன திடமாம்
கொத்தார்மலர் குளிர்சந்தகில் ஒளிர்குங்குமங் கொண்டு
முத்தாறுவந் தடிவீழ்தரு முதுகுன்றடை வோமே.   (1.12.1)

மேலுள்ள பதிகங்கள் இத்தகைய தாழிசை இனத்தைச் சேர்ந்தவை எனக் கொள்ளலாம். ஆனால் இது இலக்கண நூலில் கலிவிருத்தம் என்று அழைக்கப்படுகிறது. திருவாசகத்தின் உயிருண்ணிப் பத்து என்னும் பதிகமும் இவ்வகையைச் சேர்ந்தது.

பைந்நாப்பட அரவேரல்குல் உமைபாகம தாய்என்
மெய்ந்நாள்தொறும் பிரியாவினைக் கேடாவிடைப் பாகா
செந்நாவலர் பரசும்புகழ்த் திருப்பெருந்துறை உறைவாய்
எந்நாட்களித் தெந்நாள்இறு மாக்கேன்இனி யானே

ஆக, சீர்களின் எண்ணிக்கைதான் மாறுபடுகிறதே ஒழிய, இத்தகைய விருத்தம் மாணிக்கவாசகர் திருவாசகத்திலேயே கையாண்ட ஒன்றுதான் என்பது தெளிவு.

நட்டபாடையில்  தாழிசை இனத்தைச் சாராத பதிகங்கள் தேவாரத்தில் பல உள்ளன.

எடுத்துக்காட்டாக,

1.19 - திருக்கழுமலம் - திருவிராகம் (பண்: நட்டபாடை)

பிறையணி படர்சடை முடியிடைப்
     பெருகிய புனலுடை யவனிறை
இறையணி வளையிணை முலையவள்
     இணைவன தெழிலுடை யிடவகை
கறையணி பொழில்நிறை வயலணி
     கழுமலம் அமர்கனல் உருவினன்
நறையணி மலர்நறு விரைபுல்கு
     நலம்மலி கழல்தொழன் மருவுமே. (1.19.1)

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

திரை இசை மெட்டில் தேவாரத் திருப்பதிகம்-1 - திருச்சேய்ஞலூர்

பழந்தக்க ராகத்தில் அமைந்த, தேவாரம் முதல்-திருமுறையில் வரும் திருச்சேய்ஞலூர் என்னும் பதிகத்தை 'வைதேகிக் காத்திருந்தாள்' என்னும் படத்தில் வரும்  'காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி' என்னும் பாடலின் மெட்டில் பாடலாம். பழந்தக்க ராகத்தில் வரும் இன்னும் சில பதிகங்களையும் (1.47,1.48,1.49,1.50,1.51,1.52,1.53) இதே மெட்டில் பாடலாம்.


தேவாரம்: முதல் திருமுறை
பதிகம் : திருச்சேய்ஞலூர் (48)
பண்: பழந்தக்கராகம்
இசை மெட்டு: காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி


நூலடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு
மாலடைந்த நால்வர்கேட்க நல்கிய நல்லறத்தை
ஆலடைந்த நீழல்மேவி யருமறை சொன்னதென்னே
சேலடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே.


நீறடைந்த மேனியின்கண் நேரிழையா ளொருபால்
கூறடைந்த கொள்கையன்றிக் கோலவளர் சடைமேல்
ஆறடைந்த திங்கள்சூடி யரவம் அணிந்ததென்னே
சேறடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே.

ஊனடைந்த வெண்டலையி னோடுபலி திரிந்து
கானடைந்த பேய்களோடு பூதங் கலந்துடனே
மானடைந்த நோக்கிகாண மகிழ்ந்தெரி யாடலென்னே
தேனடைந்த சோலைமல்கு சேய்ஞலூர் மேயவனே.

வீணடைந்த மும்மதிலும் வில்மலை யாவரவின்
நாணடைந்த வெஞ்சரத்தால் நல்லெரி யூட்டலென்னே
பாணடைந்த வண்டுபாடும் பைம்பொழில் சூழ்ந்தழகார்
சேணடைந்த மாடம்மல்கு சேய்ஞலூர் மேயவனே.
   

பேயடைந்த காடிடமாப் பேணுவ தன்றியும்போய்
வேயடைந்த தோளியஞ்ச வேழம் உரித்ததென்னே
வாயடைந்த நான்மறையா றங்கமோ டைவேள்வித்
தீயடைந்த செங்கையாளர் சேய்ஞலூர் மேயவனே.

காடடைந்த ஏனமொன்றின் காரண மாகிவந்து
வேடடைந்த வேடனாகி விசயனொ டெய்ததென்னே
கோடடைந்த மால்களிற்றுக் கோச்செங்க ணாற்கருள்செய்
சேடடைந்த செல்வர்வாழுஞ் சேய்ஞலூர் மேயவனே.


பீரடைந்த பாலதாட்டப் பேணா தவன்தாதை
வேரடைந்து பாய்ந்ததாளை வேர்த்தடிந் தான்றனக்குத்
தாரடைந்த மாலைசூட்டித் தலைமை வகுத்ததென்னே
சீரடைந்த கோயில்மல்கு சேய்ஞலூர் மேயவனே.

மாவடைந்த தேரரக்கன் வலிதொலை வித்தவன்றன்
நாவடைந்த பாடல்கேட்டு நயந்தருள் செய்ததென்னே
பூவடைந்த நான்முகன்போற் பூசுரர் போற்றிசெய்யுஞ்
சேவடைந்த ஊர்தியானே சேய்ஞலூர் மேயவனே.


காரடைந்த வண்ணனோடு கனக மனையானும்
பாரிடந்தும் விண்பறந்தும் பாத முடிகாணார்
சீரடைந்து வந்துபோற்றச் சென்றருள் செய்ததென்னே
தேரடைந்த மாமறுகிற் சேய்ஞலூர் மேயவனே.


மாசடைந்த மேனியாரும் மனந்திரி யாதகஞ்சி
நேசடைந்த ஊணினாரும் நேசமி லாததென்னே
வீசடைந்த தோகையாட விரைகமழும் பொழில்வாய்த்
தேசடைந்த வண்டுபாடுஞ் சேய்ஞலூர் மேயவனே.


சேயடைந்த சேய்ஞலூரிற் செல்வன சீர்பரவித்
தோயடைந்த தண்வயல்சூழ் தோணி புரத்தலைவன்
சாயடைந்த ஞானமல்கு சம்பந்தன் இன்னுரைகள்
வாயடைந்து பாடவல்லார் வானுல காள்பவரே.

ஞாயிறு, 22 ஜூன், 2008

அந்தாதி -- இசை, இலக்கியம் பற்றிய ஓர் அலசல்

அந்தாதி

பள்ளியில் தமிழ்மொழியைப் பாடமாகக் கொண்ட அனைவருக்கும் அந்தாதி பற்றித் தெரியாமல் இருக்காது. செய்யுளில் ஒரு பாவின் இறுதியில் வரும் எழுத்தோ, சொல்லோ, சீரோ, சொற்றொடரோ அடுத்த பாவின் முதல் எழுத்தாகவோ, சொல்லாகவோ, சீராகவோ, சொற்றொடராகவோ அமைவது அந்தாதித் தொடை எனப்படுகிறது. ஒன்றின் அந்தம் மற்றொன்றின் ஆதி என்பது இதன் உட்பொருள். 

அந்தம் ஆதி இவை இரண்டுமே வடமொழிச் சொற்கள் என்றாலுங்கூட, சமஸ்கிருதத்தில் இத்தகைய யாப்பிற்கு ஏகாவலி என்று பெயர்.  இந்தோ- ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் ஒரு மொழியான வடமொழியின் அந்தம்>அந்த>அந்த் என்னும் சொல், அக்குடும்பத்தின் மற்றொரு மொழியான ஆங்கிலத்தின் end--எண்ட்--எந்த் என்பதோடு தொடர்புடையதில் வியப்பெதுவும் இல்லை.

அந்தாதித் தொடையில் அமையும் பாக்களின் தொகுப்பில் மற்றொரு நுணுக்கம் என்னவெனில், தொகுப்பின் இறுதிப் பாடலுக்கு 'அடுத்த' பாடல் தொகுப்பின் முதல் பாடல் ஆகும். அதாவது, தொகுப்பின் இறுதிப் பாடலின் இறுதி எழுத்து, சொல், சீர், சொற்றொடர் முதல் பாடலின் முதல் எழுத்தாகவோ, சொல்லாகவோ, சீராகவோ, சொற்றொடராகவோ அமையும். மனப்பாடமாக பாடல்களை ஓதும்போது பாக்கள் அடுத்தடுத்து நினைவிற்கு வருவதற்காக இத்தகைய நுணுக்கங்கள் கையாளப்பட்டு, ஒட்டுமொத்தத் தொகுப்பும் ஒரு வளையம் போல் கட்டமைக்கப்படுவதால் சில அந்தாதித் தொகுப்புகள் மணிமாலை என்னும் அடைமொழியைப் பெயரில் கொண்டுள்ளன. காரைகால் அம்மையார் பாடிய ஒரு தொகுப்பிற்கு இரட்டை மணிமாலை என்று பெயர்.

அந்தாதியில் வரும் பாவின் வகை இன்ன வகையாக இருக்கவேண்டும் என்று விதிமுறை எதுவும் இல்லை. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா மற்றும் அதன் உட்பிரிவுகள் என்று எதுவாகவும் இருக்கலாம்,  அல்லது இவைகளின் கலவையாகவும் கூட இருக்கலாம். இத்தொடையில் அமைந்த திருவாசகத்தின் ஐந்தாவது பாடலான திருச்சதகம் வெவ்வேறு பா வகைகளைக் கொண்டுள்ளது. திருச்சதகத்தில் மொத்தம் நூறு பாக்கள் உள்ளன. பத்துப்பத்தாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பத்தும் ஒரே பாவினத்தவையாக அமைந்துள்ளது. சதகம் என்றால் நூறு பாக்களின் தொகுப்பு என்று பொருள். நூறு என்னும் பொருள் கொண்ட சதம் என்னும் சமஸ்கிருதச்சொல்லிலிருந்து பிறப்பது சதகம். ஒரே குடும்பமொழியான ஆங்கிலத்தின் cent என்பதற்கும் சதம் என்பதற்கும் தொடர்புள்ளதைக் காண்க. திருச்சதகத்தில் இடம்பெற்றுள்ள பாவினங்கள் கட்டளைக் கலித்துறை, அறுசீர் விருத்தம், எழுசீர் விருத்தம், எண்சீர் விருத்தம், கலிவிருத்தம் போன்றவை. இதில் கட்டளைக் கலித்துறையைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும்.

கட்டளைக் கலித்துறையில் வரும் பா (stanza) நான்கு அடிகளைக் கொண்டது. ஒவ்வொரு அடியிலும் ஐந்து சீர் இருக்கவேண்டும், முதல் நான்கு சீர்களும் இயற்சீர் வெண்டளை/வெண்சீர் வெண்டளைப் பெற்று வரவேண்டும், இறுதிச்சீர் விளங்காய்ச் சீராவோ, மாந்தண்பூச் சீராகவோ இருக்கலாம்  என்னும் இலக்கண நுட்பத்தையெல்லாம் புறந்தள்ளிவிட்டு ஒரு இன்றியமையாத விதிமுறைக்கு வருவோம். அது என்னவென்றால் ஒவ்வொரு அடியிலும் உள்ள உயிர் மற்றும் உயிர்மெய் எழுத்துக்கள் மொத்தமாக குறிப்பிட்ட எண்ணிக்கையைப் பெற்றிருக்க வேண்டும். ஒரு அடியின் முதல் சீர் நேரசையில் (~one-syllabic particle) தொடங்கினால் உயிர்/உயிர்மெய் எழுத்துக்களின் மொத்த எண்ணிக்கை 16க்கு மிகாமல் குறையாமல் இருக்கவேண்டும், முதல் சீர் நிரையசையில் (~two-syllabic particle) தொடங்கினால் அவற்றின் எண்ணிக்கை 17க்கு மிகாமல் குறையாமல் இருக்க வேண்டும். அப்படி எண்ணும் போது புள்ளிவைத்த ஒற்றெழுத்துக்களை நீக்கிவிட வேண்டும், மேலும் குற்றியலுகரங்களை அவைகளை அடுத்து வரும் உயிரெழுத்துக்களோடு சரிவரப் புணர்த்திய பிறகே கணக்கிட வேண்டும்.

திருச்சதகத்தின் முதல் பத்து பாக்களும் கட்டளைக் கலித்துறையில் அமைந்துள்ளன. அதன் முதலிரண்டு பாக்கள்:

மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென்
கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பியுள்ளம்
பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றிச் சயசய போற்றியென்னும்
கைதான் நெகிழவிடேன் உடையாய் என்னைக் கண்டுகொள்ளே

கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு குடிகெடினும்
நள்ளேன் நினதடி யாரொடல் லால்நர கம்புகினும்
எள்ளேன் திருவரு ளாலே இருக்கப் பெறின்இறைவா
உள்ளேன் பிறதெய்வம் உன்னையல் லாதெங்கள் உத்தமனே


My frame before Thy fragrant foot is quivering like an opening bud;
My hands above my head I raise; while tears pour down, my melting soul,
The false renouncing, praises Thee; with songs of triumph praises Thee,
Nor suffer I adoring hand to rest; O Master, look on me!

I ask not the bliss of Indra, Mal, Ayan; though my house and home
Be ruin'd, friendship form I none save with Thine own; though hell's abyss
I enter, I unmurmuring go, if grace dvine appoint my lot;
O King! No other god save Thee I ponder, our Transcendent Good!

திருவாசகத்தின் அடுத்த பாடல் "நீத்தல் விண்ணப்பம்" என்னும் தலைப்பில் அமைந்து 50 பாக்களைக் கொண்டுள்ளது. இந்த ஐம்பதுமே கட்டளைக் கலித்துறையில், அதுவும் அந்த்தாதித் தொடையில் அமைந்துளன. மேலும் மாணிக்கவாசகர் இயற்றிய திருக்கோவையார் நூலின் 400 பாக்களுமே கட்டளைக் கலித்துறையில் அமைந்துள்ளன. மறைமலை அடிகள் எழுதிய "மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்" என்னும் ஆராய்ச்சி நூலின் அடிப்படையில் பார்த்தால் மாணிக்கவாசகர் காலம் ஏறத்தாழ கி.பி. மூன்றாம் நூற்றாண்டு. கட்டளைக்கலித்துறை என்னும் பாவினத்திற்கு இவரே முன்னோடியாகக் கூட இருக்கலாம்.

அந்தாதித் தொடையில் கட்டளைக் கலித்துறை அமைப்பைப் பெற்ற மேலும் சில பாடல்கள்: அபிராமிப்பட்டர் இயற்றிய அபிராமி அந்தாதி, கம்பர் எழுதிய சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி. குறிப்பாக, அபிராமி அந்தாதியானது சீர்காழி கோவிந்தராஜன், சூலமங்கலம் சகோதரிகள், பாம்பே சாரதா போன்றோரால் பாடப்பட்டிருந்தாலும், பாம்பே சாரதா அவர்கள் கையாண்டுள்ள மெட்டானது கட்டளைக்கலித்துறையில் அமைந்த மற்ற பாடல்களுக்கும் உகந்ததாக உள்ளது. அந்த மெட்டைக் கேட்டவர்கள் அதே மெட்டில் மற்ற கட்டளைக் கலித்துறைப் பாடல்களையும் பாடிவிடலாம்.

திருச்சதகத்தின் இன்னொரு பா:

ஈச னேஎன் எம்மானே எந்தை பெருமான் என்பிறவி
நாச னேநான் யாதும்ஒன் றல்லாப் பொல்லா நாயான
நீச னேனை ஆண்டாய்க்கு நினைக்க மாட்டேன் கண்டாயே
தேச னேஅம் பலவனே செய்வ தொன்றும் அறியேனே!

இது அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என்னும் பாவகையைச் சேர்ந்தது. இதன் மொழிபெயர்ப்பு:

O Master, O my Mighty One, my Father, Perumaan, my births'
Destroyer, Thou Who mad'st me Thine, an evil wholly worthless dog,
And thoroughly base; I cannot think, Thou see'st--of any meet return to Thee,
O Shining One, Lord of the Porch, nor know I aught that I can do.

திருவாசகம் முழுமையும் யாரும் பாடல்களாகப் பாடியிருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. ஆனால் இப்படி பாக்களைப் பார்க்கும் போது இதனைப் பாடலாகப் பாடினால் நன்றாக இருக்குமே என்று எனக்குத் தோன்றும். எனக்கோ சங்கீதத்தில் துளியும் ஞானமில்லை. அதனால் திரைப்பட பாடல் மெட்டில் நானே சில நேரங்களில் பாடிக்கொள்வதுண்டு. இப்படித் திரைப்பட பாடல் மெட்டில் சமய இலக்கியங்களைப் பாடுவதில் சிலருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. மேற்கண்ட 'ஈசனே' எனத் தொடங்கும் பாடலை "காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்" என்னும் பாடல் மெட்டில் பாடலாம்.

திருச்சதகத்தில் பத்தாவது பத்து இவ்வாறு தொடங்குகிறது:

மாறி லாதமாக் கருணை வெள்ளமே
          வந்து முந்திநின் மலர்கொள் தாளிணை
வேறி லாப்பதப் பரிசு பெற்றநின்
          மெய்ம்மை அன்பருண் மெய்ம்மை மேவினார்

இந்த வரிகளை, 'பாலும் பழமும் கைகளில் ஏந்தி' என்னும் பாடல் மெட்டில் பாடலாம்.

மேலும், 32 மற்றும் 33  ஆம் பாடல்களான பிரார்த்தனைப் பத்து, குழைத்த பத்து ஆகியவை அந்தாதித் தொடையில் அமைந்த அறுசீர் கழிநெடிலடி ஆசிரிப்பாக்கள் ஆகும். ஒரு மேற்கோள்:

கலந்து நின்னடி யாரோடு
       அன்று வாளாக் களித்திருந்தேன்
புலர்ந்து போன காலங்கள்
       புகுந்து நின்ற திடர்பின்னாள்

இவைகளை, உதாரணமாக, கவலை இல்லா மனிதன் படத்தில் இடம்பெற்ற "பிறக்கும் போதும் அழுகின்றாய்" என்னும் பாடல் மெட்டில் பாடலாம்.

திருமூலர் மூவாயிரம் பாக்களைக் கொண்ட தனது திருமந்திரத்தில் அந்தாதித் தொடையிலும் சில பாக்களை இயற்றியுள்ளார். இவரும் ஒருவகையான கட்டளையையே திருமந்திரம் முழுக்கக் கையாள்கிறார் --உயிர்/உயிர்மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை பதினொன்று பன்னிரண்டு என அமைகின்றன. இத்தகைய செய்யுளுக்கென்று தனிப்பெயர் எதுவுமில்லை போலும்.

விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு 
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து 
உண்ணின் றுருக்கியொர் ஒப்பிலா ஆனந்தக்    
கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே.


He came down from Heaven, clothed in body,
Karma to match, stretched forth His cool Feet of Grace, planting them firm
On my head; and lo! inside me He stood, melting my yielding heart;
And filled my eyes with peerless bliss, past all compare,
All impurity dispelled.

வெறும் மொழிபெயர்ப்புகள் உட்பொருளை விளக்கிவிடா.  

சூலமங்கலம் சகோதரிகள் பாடிய கந்த சஷ்டி கவச மெட்டில் ஒட்டுமொத்த திருமந்திரத்தையும் பாடிவிடலாம். இந்த மெட்டில் நிலைமண்டில ஆசிரியப்பாவில் அமைந்த பாக்களையும் பாடலாம். இந்த பாவினத்தில் அமைந்த சில படைப்புகள்: திருவாசகத்தின் இரண்டாவது பாடலான "கீர்த்தித் திருஅகவல்",  நான்காவது பாடலான "போற்றித் திரு அகவல்", மற்றும் சிலப்பதிகாரத்தில் குரவைப் பாட்டு, கானல் வரி பாடல் போன்றவை தவிர மற்ற அனைத்துக் காதைகளும், மணிமேகலையின் அனைத்துக் காதைகளும். ஆசிரியப்பா அகவல் ஓசையைப் பெற்று வருவதால், அத்தகைய அகவல் ஓசை கொண்ட மெட்டுக்களையும் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, அமர்க்களம் படத்தில் இடம்பெற்ற "சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்" என்னும் பாடல் மெட்டு. போற்றித் திரு அகவலில் போற்றி போற்றி என முடியும் ஒரு பாதிக்கு இந்த மெட்டு பொருத்தமாக இருக்கும்.

மற்றொமொரு சித்தர் போகர் இயற்றிய 'போகர் ஏழாயிரம்' என்னும் திரட்டில் மருத்துவம், யோகம், தன்வரலாறு, பிற சித்தர்கள் வரலாறு பற்றி ஏழாயிரம் பாக்கள் உள்ளன. ஏழாயிரத்தில் ஒரு சில பாக்களைத் தவிர,  இவை பெரும்பாலும் அந்தாதித் தொடையில் அமைந்துள்ளன. தனது மாணவன் புலிப்பாணிக்குப் போதிப்பது போல் இதனை இயற்றியுள்ளார். அதனால்தான், நினைவில் நிறுத்துவதற்கு அந்தாதியைக் கையாண்டுள்ளார் போலும். விண்ணில் பறக்கும் தேர் ஒன்றைத் தான் உருவாக்கியதைப்  பற்றியும் (1868-1880), நீராவியால் இயங்கும் ஒரு மாபெரும் கப்பல் கட்டியதையும் (1926-1943) அதில் பிற சித்தர் முனி ரிஷிகளுடன் உலகம் முழுவதையும் தான் சுற்றிவந்ததையும் கூட (1946), போகர் விவரிக்கிறார்:

செய்யவே மராமரக் கப்பல் தானும்
        சிறப்பாக ஆயிரம் கூட்டத் தோடும்
பையவே சூத்திரமா மரக்க லந்தான்
         பாருலகில் சீனபதி யார்கள் மெச்ச
மெய்யவே நீளமது கெஜமெண் ணூறு
        மெதிரான வகலமது கெஜனே நூறு
பெய்யவே சதுரமது தீர்மா னித்து
        பிசகின்றி முடித்தவகை கூறு வேனே. (1927)

மாச்சப்பா இடப்பக்கம்தண் ணியது நிற்க,  
       அப்பனே, குழலொன்றுசமைத் திட்டேன் யானும். 
மூச்சப்பா போகாமல்குழை களுக்கும் புக்கு
       முளையான தண்ணீரும்கொதிக் குமிக வேளை 
வாச்சமுடன் தான்திறந்துதண் ணீரும் ஆவி 
       மற்றுமுள்ள குழைகளுக்குதா னருந்தி யோட   
காச்சநீ ராவிகுழல் தனிலே புகுந்து 
       கருவான சக்கரத்தைதிருப் பமிக லாச்சே! (1940)

கப்பலின் நீளம் எண்ணூறு கெஜமாம். கிட்டத்தட்ட 720 மீட்டர். 1912-ஆம் ஆண்டு மூழ்கிய டைட்டானிக் கப்பலின் நீளம் 269 மீட்டர் தான். ஏழாயிரம் எழுதப்பட்ட காலம், அதன் முழு உரை போன்ற ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டுள்ளனவா என்று தெரியவில்லை. மேற்கொண்டு இதைப்பற்றி இன்னொரு நாள் பார்க்கலாம்.