செவ்வாய், 8 ஏப்ரல், 2014

திரை இசை மெட்டில் தேவாரத் திருப்பதிகம்-1 - திருச்சேய்ஞலூர்

பழந்தக்க ராகத்தில் அமைந்த, தேவாரம் முதல்-திருமுறையில் வரும் திருச்சேய்ஞலூர் என்னும் பதிகத்தை 'வைதேகிக் காத்திருந்தாள்' என்னும் படத்தில் வரும்  'காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி' என்னும் பாடலின் மெட்டில் பாடலாம். பழந்தக்க ராகத்தில் வரும் இன்னும் சில பதிகங்களையும் (1.47,1.48,1.49,1.50,1.51,1.52,1.53) இதே மெட்டில் பாடலாம்.


தேவாரம்: முதல் திருமுறை
பதிகம் : திருச்சேய்ஞலூர் (48)
பண்: பழந்தக்கராகம்
இசை மெட்டு: காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி


நூலடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு
மாலடைந்த நால்வர்கேட்க நல்கிய நல்லறத்தை
ஆலடைந்த நீழல்மேவி யருமறை சொன்னதென்னே
சேலடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே.


நீறடைந்த மேனியின்கண் நேரிழையா ளொருபால்
கூறடைந்த கொள்கையன்றிக் கோலவளர் சடைமேல்
ஆறடைந்த திங்கள்சூடி யரவம் அணிந்ததென்னே
சேறடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே.

ஊனடைந்த வெண்டலையி னோடுபலி திரிந்து
கானடைந்த பேய்களோடு பூதங் கலந்துடனே
மானடைந்த நோக்கிகாண மகிழ்ந்தெரி யாடலென்னே
தேனடைந்த சோலைமல்கு சேய்ஞலூர் மேயவனே.

வீணடைந்த மும்மதிலும் வில்மலை யாவரவின்
நாணடைந்த வெஞ்சரத்தால் நல்லெரி யூட்டலென்னே
பாணடைந்த வண்டுபாடும் பைம்பொழில் சூழ்ந்தழகார்
சேணடைந்த மாடம்மல்கு சேய்ஞலூர் மேயவனே.
   

பேயடைந்த காடிடமாப் பேணுவ தன்றியும்போய்
வேயடைந்த தோளியஞ்ச வேழம் உரித்ததென்னே
வாயடைந்த நான்மறையா றங்கமோ டைவேள்வித்
தீயடைந்த செங்கையாளர் சேய்ஞலூர் மேயவனே.

காடடைந்த ஏனமொன்றின் காரண மாகிவந்து
வேடடைந்த வேடனாகி விசயனொ டெய்ததென்னே
கோடடைந்த மால்களிற்றுக் கோச்செங்க ணாற்கருள்செய்
சேடடைந்த செல்வர்வாழுஞ் சேய்ஞலூர் மேயவனே.


பீரடைந்த பாலதாட்டப் பேணா தவன்தாதை
வேரடைந்து பாய்ந்ததாளை வேர்த்தடிந் தான்றனக்குத்
தாரடைந்த மாலைசூட்டித் தலைமை வகுத்ததென்னே
சீரடைந்த கோயில்மல்கு சேய்ஞலூர் மேயவனே.

மாவடைந்த தேரரக்கன் வலிதொலை வித்தவன்றன்
நாவடைந்த பாடல்கேட்டு நயந்தருள் செய்ததென்னே
பூவடைந்த நான்முகன்போற் பூசுரர் போற்றிசெய்யுஞ்
சேவடைந்த ஊர்தியானே சேய்ஞலூர் மேயவனே.


காரடைந்த வண்ணனோடு கனக மனையானும்
பாரிடந்தும் விண்பறந்தும் பாத முடிகாணார்
சீரடைந்து வந்துபோற்றச் சென்றருள் செய்ததென்னே
தேரடைந்த மாமறுகிற் சேய்ஞலூர் மேயவனே.


மாசடைந்த மேனியாரும் மனந்திரி யாதகஞ்சி
நேசடைந்த ஊணினாரும் நேசமி லாததென்னே
வீசடைந்த தோகையாட விரைகமழும் பொழில்வாய்த்
தேசடைந்த வண்டுபாடுஞ் சேய்ஞலூர் மேயவனே.


சேயடைந்த சேய்ஞலூரிற் செல்வன சீர்பரவித்
தோயடைந்த தண்வயல்சூழ் தோணி புரத்தலைவன்
சாயடைந்த ஞானமல்கு சம்பந்தன் இன்னுரைகள்
வாயடைந்து பாடவல்லார் வானுல காள்பவரே.

கருத்துகள் இல்லை: