சனி, 14 ஜூலை, 2012

யாருக்காக? எதற்காக?

இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் பொருட்கள், நடக்கும் செயல்கள் யாருக்காக, எதற்காக இருக்கின்றன, நடக்கின்றன என்னும் கேள்வியைப் பலரும் தங்களுக்குள்ளே கேட்டிருக்கலாம், அல்லது பலருக்கு இப்படியெல்லாம் கேட்கலாம் என்பதேகூட தெரியாமலேயும் இருக்கலாம். நோபல் பரிசு பெற்ற ரிச்சர்ட் ஃபெய்ன்மேன் என்னும் இயற்பியல் வல்லுனர், இந்தக் கேள்வியை தனக்கேயுரிய பாணியில் கேட்கிறார். இதற்கான எனது மொழிபெயர்ப்பை அதற்குக் கீழே, நிலை மண்டில ஆசிரியப்பாவில் கொடுக்க முயன்றுள்ளேன்.

I stand at the seashore, alone, and start to think.

There are the rushing waves
mountains of molecules,
each stupidly minding its own business
trillions apart
yet forming white surf in unison.

Ages on ages
before any eyes could see
year after year
thunderously pounding the shore as now.
For whom, for what?
on a dead planet,
with no life to entertain.

Never at rest,
tortured by energy,
wasted prodigiously by the sun
poured into space.
A mite makes the sea roar.

Deep in the sea,
all molecules repeat
the patterns of one another
till complex new ones are formed.
They make others like themselves
and a new dance starts.

Growing in size and complexity,
living things, masses of atoms, DNA, protein,
dancing a pattern ever more intricate.

Out of the cradle onto the dry land
here it is standing,
atoms with consciousness,
matter with curiosity.

Stands at the sea,
wonders at wondering;
I ... a universe of atoms,
an atom in the universe.

--- Richard Feynman

This I venture to translate into Tamil in the meter of Nilai Mandila Aasiriya'p Paa-- a variety of classical Tamil verse with certain intricate metric structure.

இனியஓர் காலையில் கடலதன் கரையில்
தனியே நின்றுநான் நினைத்துப் பார்க்கிறேன்.

கரையை ஓயாது ஓங்கி அறையும்
திரையில் மலைமலை ஆக அணுக்கள்,
ஒவ்வோர் அணுவும் மடத்தன மாகச்
செவ்வனே தத்தம் கடமையைச் செய்வதும்,
கோடி கோடியாய் இங்கும் அங்கும்
ஓடி யலைந்து பிரிந்தாலும் ஒருமித்து
வெண்மை நுரையைச் செய்வதும் யார்க்காக?

ஆண்டாண் டாக எந்தவொரு கண்ணும்
காண்டிராக் காலமும், யுகயுக மாக
இடியென கரையை இப்போது போன்றே
இடித்துக் கொண்டதும் யார்க்காக? எதற்காக?
பொட்டலாய், வேடிக்கை பார்க்கவும் உயிரிலா
பட்ட பூமியில் அத்தனை யும்எதற்கு?

ஓய்வுஒரு பொழுது மின்றிப் பகலவன்
காய்வில் வீணடிக்கப் பட்டு விண்வெளியில்
பீறிடும் பேராற் றலதன் சிறுதுளி
சீறிய கடலின் ஆர்ப்பரிப் பாகி,

ஆழக் கடலில் அங்கம் அங்கமாய்
தாழவே மூலக் கூறுகள் ஒன்றுமற்
றொன்றை உரித்து வைத்தாற் போல
சென்று பெருகி சிக்கலாய் வளர்ந்து,

வளர்ந்த ஒவ்வொரு கூறும் தன்னையே
அளந்தெடுத் தாற்போல் புதிதைப் பிறப்பித்து
ஈடிணை இலாத ஓர்ஆட்டம் தன்னைக்
கோடியாய்த் தொடங்கி, உருவம் பெரிதாகிக்
கொண்டே போக, அணுவின் தொகுதிகள்,
DNA, புரோட்டீன், உயிரென்று அவற்றில்
எத்தனை எத்தனையோ சிக்கு முக்குகள்,

அத்தனை யுள்ளொன்று அங்கிருந்து இங்கே,
உலர்ந்த தரையில் உருக்கொண்டு நின்ற-அறு
புலத்தைப் பெற்ற அணுக்கள், ஆர்வமுற்ற
பொருளாய் கரையில் நின்று கொண்டுஓர்
அருத்த முள்ள பார்வையால் விந்தையைக்
கண்டு வியக்கும்...நான்...ஓர் அணுக்களின்
அண்டம், அண்டத்தில் ஓரணு வேஎன்.

2 கருத்துகள்:

'பசி'பரமசிவம் சொன்னது…

மொழியாக்கம் என்று நீங்கள் குறிப்பிடாமல் இருந்தால், இது உங்கள் ’சுய ஆக்கம்’ என்று சொல்லும் வகையில் படைப்பு அமைந்திருக்கிறது.

நல்ல நடை; சிறப்பான சொல்லாட்சி.

பாராட்டுகள்.

முத்துநாடான் சொன்னது…

@ முனைவர் பரமசிவம்:

எனது வலைப்பதிவிற்கு வருகை தந்து உங்கள் கருத்துக்களை பதிந்ததற்கு நன்றி. எனது வலைப்பதிவின் முதல் மறுமொழியும் உங்களுடையது என்னும் சிறப்பும் உங்கள் மறுமொழிக்கு உள்ளது.