இந்த இணைப்பில், தமிழ் எழுத்துக்களைப் பற்றிக் கூறும்போது, தொல்காப்பியர் னகரத்தை ஏன் இறுதியில் வைத்தார் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு எனது மறுமொழி:
உயிர் ஒலி என்பது வாயினுள்ளே மேல் பகுதியும் கீழ்ப்பகுதியும் ஒட்டாமால்
ஏற்படுத்தப்படும் ஒலி. மெய் ஒலி என்பது அவ்விரு பகுதிகளும்
ஒட்டிப்பிரிவதால் உண்டாகும் ஒலி. ஒட்டுவதால் மட்டுமே ஒலி உண்டாகாது
என்பதால்தான், மெய் ஒலி தனித்துவராமல், உயிர்மெய் (மெய்யுயிர்) ஆக
ஒலிக்கப்படுகிறது. இந்த நுட்பத்தைப் புரிந்துகொண்டால், மெய்யெழுத்துக்களின்
வரிசைப்படுத்துதலில் ஒரு ஒழுங்கு இருப்பது புரியும்.
க், ங் — வாயினுள்ளே, நாக்கின் பின்பகுதியும் மேலண்ணத்தின் பின்பகுதியும் ஒட்டுகின்றன.
ச்,ஞ் – சற்று முன்னால் உள்ள பகுதிகள் ஒட்டுகின்றன.
ட், ண் – நாக்கு வளைந்து சென்று அதன் அடி நுனி, மேலண்ணத்தின் பகுதியைத் தொடுகிறது.
த், ந் – நாக்கின் மேல் நுனி பற்களைத் தொடுகிறது.
ப், ம் – உதடுகள் ஒட்டுகின்றன.
அதாவது, தொட்டுக்கொள்கின்ற மேல்-கீழ் பகுதிகள், அடுத்தடுத்து உள்ளிருந்து வெளிநோக்கிய வாக்கில் இருக்கின்றன.
ய், ர், ல்,வ் – உள்ளிருந்து வெளிநோக்கி வருகின்றன.
ழ், ள், ற், ன் உள்ளிருந்து வெளிநோக்கி வருகின்றன.
ககரம் தொடங்கி வகரம் வரை வருவது வடமொழியின் எழுத்து வரிசையைப் பின்பற்றி
வைக்கப்பட்டுள்ளன என்றும், வடமொழியில் இல்லாத ழ், ற், ன் இறுதியாகச்
சேர்க்கப்பட்டன என்றும் ஒரு கருத்து உள்ளது. ஆனால் இக்கருத்தானது,
வடமொழியில் உள்ள ளகரத்திற்குப் பிறகு ழகரம் வைக்கப்பட்டிருந்தால் ஒருவேளை
ஏற்புடையதாக இருந்திருக்கும். மேலும், வடமொழி-தென்மொழிச் சண்டையில், வடமொழி
முந்தியா, தமிழ் முந்தியா என்பது முழுமையாகத் தீர்க்கப்படாத ஒன்று.
அதனால், னகரம் ஏன் இறுதியில் வைக்கப்பட்டது என்னும் கேள்வியைவிட,
உள்ளிருந்து வெளியே என்னும் நுட்பத்தின்படி, னகரத்தைப் பலுக்கும்
பகுதிகளைவிட புறத்தே உள்ள உதடுகளால் ஒலிக்கப்படும் பகரமோ, மகரமோ ஏன்
இறுதியில் இல்லை என்னும் கேள்வி பொருத்தமாக இருக்கும்.
வல்லினத்தையும், அதற்கு இனமான மெல்லினத்தையும் முதலில்
வரிசைப்படுத்திவிட்டு, இடையினத்தை இறுதியில் வைத்தார்கள் என்று
வாதித்தாலும் கூட, னகரத்தைவிட புறத்தே பலுக்கப்படும் வகரத்தை ஏன் இறுதியில்
வைக்கவில்லை என்னும் கேள்வியும் எழக்கூடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக