சனி, 29 ஜூலை, 2006

உடல் ஒரு பொருளுக்கு அடிமையாவது எப்படி?

ஒரு மனிதன் ஒரு பொருளுக்கு, ஒரு பழக்கத்திற்கு, அடிமையாவதன் ஆணிவேர் என்ன, அடிமையாகும் நிகழ்வின் வெவ்வேறு நிலைகள் என்னென்ன, அவைகளில் இருந்து தன்னை மீட்டுக்கொள்ள அவன் என்ன செய்யவேண்டும் என்பது பற்றி ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை தெளிவாக விளக்குகிறது. மணிமேகலையின் கடைசிக் காதையான " 'பவத் திறம் அறுக' எனப் பாவை நோற்ற காதை"யில் இதற்கான விளக்கங்கள் பொதிந்து உள்ளன.

"பேதைமை", "செய்கை", "உணர்வு", "அருவுரு", "வாயில்", "ஊறு", "நுகர்வு", "வேட்கை", "பற்று" போன்ற படிநிலைகளைக் கொண்ட இந்தச் சங்கிலித் தொடரின் ஆணிவேர் பேதைமை. பிறவியை அறுத்தொழிக்கச் சொல்லப்பட்ட நுணுக்கத்தின் ஒருபகுதி தான் மேற்சொல்லப்பட்டவை. இவைகளில் ஒவ்வொரு சொல்லும் நமக்குத் தெரிந்த சொல் போல் காணப்பட்டாலும், மேம்போக்காக இவை உணர்த்தும் பொருளை விட ஆழமான பொருள்கள் சில சொற்களுக்கு உண்டு. இவை அனைத்துமே மணிமேகலை போதிக்கும் புத்தமதக் கலைச்சொற்கள். இவைகளுக்கான அர்த்தங்களையும் மணிமேகலையே விளக்குகிறது.

பேதைமை

முயலுக்கு கொம்பு உண்டு என்று ஒருவர் சொன்னால் அதனை எளிதில் நம்பிவிடும் குணம். 

செய்கை

நல்லன, தீயன என்று இருவகை உண்டு.

இவற்றில் தீயன பத்து வகைப்படும். இந்த பத்துவகையை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்: 1) உடலால் நிகழ்வன 2) மனத்தில் தோன்றுவன 3) பேசும் சொல்லில்  தோன்றுவன.
  1. உடலால் நிகழ்வன: கொலை செய்வது, திருடுவது, காமவெறி
  2. மனத்தில் தோன்றுவன: பிறர் பொருளைக் கைப்பற்ற எண்ணுவது, சினம் கொள்வது, குதர்க்க சிந்தனை
  3. சொல்லில் தோன்றுவன: பொய் சொல்லுதல், கோள்மூட்டுதல், கடுஞ்சொல், வெட்டிப்பேச்சு.
 உணர்வு

இங்கு சொல்லப்படும் உணர்வின் பொருள், உறக்கத்தில் இருப்பவர்கள் தன்னை அறியாமல் செயல்படும்போது அவர்கள் பெற்றிருக்கும் உணர்வு எத்தகையதோ அத்தகையது.

அருவுரு

மேற்கண்ட உணர்வைப் பெற்றிருக்கும் அருவமான உயிரும், உருவமான உடலும் சேர்ந்தது அருவுரு.

வாயில்

உள்ளத்தில் தோன்றுவது உள்ளத்தில் உணர்ந்துகொள்ளப்படும் இடம் மற்றும் உடலில் உணர்ந்துகொள்ளப்படும் இடங்களான ஐம்பொறிகள் என வாயில் ஆறு வகைப்படும்.

ஊறு

உள்ளத்தில் தோன்றுவது ஒன்றாக இருக்க, வாயில்கள் வேறு செயல்களில் ஈடுபடுதல் ஊறு (ஊறுபாடு-தீங்கு) எனப்படுகிறது. [கவலையை மறக்க வேண்டும் என்ற எண்ணம் எழும்போது, சிலர் 'தண்ணி'யடிக்க வேண்டும் என வேறுவிதமாக விரும்புவது.]

நுகர்வு

உணர்வானது புலன்களை நுகரும் நுகர்ச்சியில் ஈடுபடுதல்.

வேட்கை

நுகர்ச்சி மேற்கொள்ளும் ஆசை அடங்காமல், மேன்மேலும் ஆசை எழுந்து கொண்டிருக்கும் நிலையே வேட்கை.

பற்று

அடங்காத அத்தகைய ஆசையால், அதனையே இறுகப் பற்றி, அது இல்லாமல் தாமில்லை என்னும் நிலை.


ஒருவரின் பேதைமையைப் பொருத்து அவரது செய்கை இருக்கும். செய்கையைப் பொருத்து அவருக்கு உணர்ச்சி அமைந்துவிடும். உணர்ச்சியைப் பொருத்து அவரது உயிரும் உடலும் படிப்படியாக மாறி அமையும். அவரது உயிருடலைப் பொருத்து அவரது ஆறுவாயில்கள் அமையும். அந்த வாயில்களுக்குத் தக்கவாறு அவரது ஊறுபாடு அமையும். ஊறுபாட்டுக்குத் தக்கவாறு அவரது நுகர்ச்சி அமையும். நுகர்ச்சி மிக மிக வேட்கை பெருகும். வேட்கையைப் பொருத்து அவருக்கு அடிமைத்தனம் (பற்று) வந்துவிடும். 

இதற்கு ஒரே வழி அவர் பேதைமையில் இருந்து மீளவேண்டும்:

பேதைமை மீள, செய்கை மீளும்;
செய்கை மீள, உணர்ச்சி மீளும்;
உணர்ச்சி மீள அருவுரு மீளும்;
அருவுரு மீள, வாயில் மீளும்;
வாயில் மீள, ஊறு மீளும்;
ஊறு மீள, நுகர்ச்சி மீளும்,
நுகர்ச்சி மீள, வேட்கை மீளும்,
வேட்கை மீளப் பற்று மீளும்.

வேறுவிதமாகப் பார்த்தால், இவற்றிற்கெல்லாம் ஆசை, சினம், அறியாமைதான் காரணம். காமம், வெகுளி, மயக்கம் என்று திருவள்ளுவர் கூறுவதையே சாத்தனாரும் வழிமொழிகிறார். மீட்சிக்கு வழி, 1) இன்னன்னவற்றிற்கு இவையிவை காரணம் என்று புரிந்துகொள்ளுதல் 2) பொருள்களை நிலையற்றன என்றும், துன்பம் தருவன என்றும், ஆன்மா அற்றன எனவும், அருவருப்பு உடையன என்றும் தனித்தனியே பிரித்துப் பார்த்து பற்றைத் துறக்க வேண்டும். 3) அன்பு, இரக்கம் மற்றும் உவகை நிலை கொண்டு சினத்தைத் துறக்க வேண்டும். 4) நல்ல நூல்களைக் கற்று, அவற்றின் பொருள்களைப் பற்றிச் சிந்தனை செய்து, அச்சிந்தனையில் மனதை ஒருமித்து, தகுந்த விளக்கம் பெற்று அறியாமையைத் துறக்க வேண்டும். இந்த நான்கு வகையால் இருள் சூழ்ந்திருக்கும் மனதில் ஒளியேற்றலாம்.

"யாம்மேல் உரைத்த  பொருள்கட்கு எல்லாம்
காமம் வெகுளி மயக்கம் காரணம்.
அநித்தம், துக்கம், அநான்மா, அசுசி என
தனித்துப் பார்த்துப் பற்றுஅறுத் திடுக;
 மைத்திரி கருணா முதிதை என்றறிந்து
திருந்துநல் உணர்வான் செற்றம் அற்றிடுக;
சுருதி, சிந்தனா, பாவனா, தரிசனை
கருதி உய்த்து மயக்கம் கடிக;
இந்நால் வகையான் மனத்திருள் நீங்கு! ..."

என்கிறார் அவர்.

எதுயெப்படியோ, தான் மீள வேண்டும் என்னும் உந்துதல் இல்லாமல், அதனைச் செயல்படுத்தும் முயற்சியில் இறங்காமல் மீட்சி என்பது  நடக்கப்போவதில்லை என்பதென்னவோ உண்மைதான்.

2 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

எதுயெப்படியோ, தான் மீள வேண்டும் என்னும் உந்துதல் இல்லாமல், அதனைச் செயல்படுத்தும் முயற்சியில் இறங்காமல் மீட்சி என்பது நடக்கப்போவதில்லை என்பதென்னவோ உண்மைதா//


அனைவரும் அவசிய்ம் படித்தறியவேண்டிய
பயனுள்ள அருமையான பதிவு
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்

முத்துநாடான் சொன்னது…

@ Ramani

உங்கள் வருகைக்கும் உங்களது மேலான கருத்துக்களுக்கும் நன்றி.